Thursday, January 10, 2008

Chennai Book Fair 2008 - Day 07

இன்று கூட்டம் பெரிய அளவில் வந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லும்படியாக இருந்தது.

இரண்டரை மணிக்கு திடீரென பரபரப்பு, சலசலப்பு. ஏகப்பட்ட புகைப்பட ஃப்ளாஷ்கள். யாரோ அரசியல்வாதி வருகிறார் என நினைத்தால், காவியுடையில் வந்தார் சுவாமி நித்யானந்தா. கூட்டம் சூழ, ஒரு கூட்டம் எதிர்கொண்டழைக்க, லேசான பெண்மையின் முகச்சாயலில் புன்னகை பூத்தபடி வேகமாக நடந்துவந்தார் சுவாமி நித்யானந்தா. அவரது அரங்கு கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அந்தப் பக்கம் இந்தப்பக்கம் செல்லமுடியாமல் புத்தகத்தை வாங்கவும் உத்திராட்சம் போன்ற மாலையை வாங்கவும் (ஒரு மாலை நூறு ரூபாய்!)கடும்கூட்டம் அலைமோதியது. நான் புகைப்படம் எடுக்க முனைந்தபோது, சுவாமியின் பக்தகோடி ஒருவர் அவரது கைகொண்டு கேமராவை மறைத்தார். ப்ளாஷ் விழக்கூடாது என்று செய்கிறார் என நினைத்து, சில படங்கள் எடுத்தேன். சட்டென என் கையிலிருந்து கேமராவை பறித்தார் இன்னொரு சிஷ்யகோடி. என்ன ஏதென்று கேட்காமல் கேமராவில் இருந்த புகைப்படங்களை அழித்துவிட்டு, படம் எடுக்கக்கூடாது என்றார். நான் கேட்டேன்,அவரது ஆளுயர கட்டவுட் வைத்திருக்கிறீர்கள், இதை ஏன் எடுக்கக்கூடாது என்று. அதற்கு அவர், எடுக்கக்கூடாது ஸார் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவரது ஸ்டாலில் உள்ள புத்தகங்களில் அவர் விதவிதமாக, க்ளோஸ் அப்பில், லாங் ஷாட்டில், சிரித்துக்கொண்டு, தியானம் செய்துகொண்டு, தபேலா வாசித்துக்கொண்டு என போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். அனைத்தும் வண்ணப் படங்கள். அதை எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

சுவாமிஜியின் காலில் பக்தர்கள் விழ ஆரம்பிக்க கடும் கூட்ட நெருக்கடி ஏற்பட்டது. நான் விலகி வந்துவிட்டேன்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், சுவாமி உடனடியாக அரங்கை விட்டுப் போகவில்லை. பொறுமையாக நிறைய அரங்கில் சென்று புத்தகங்களைப் பார்வையிட்டார். நிறைய பேர் புகைப்படம் எடுக்க ஆரம்பித்திருந்தார்கள். நான் மீண்டும் அந்தப் பக்கம் சென்றபோது, எனது புகைப்படங்களை அழித்தவரிடம், இப்ப மட்டும் புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டேன். என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டு சிஷ்யகோடி சொன்னார், ஒண்ணு ரெண்டு எடுக்கலாம் என்று. நான் ஒன்றை எடுத்துவைத்தேன்.

கிட்டத்தட்ட 8 மணி வாக்கில்தான் சுவாமி நித்யானந்தா புத்தகக் காட்சியிலிருந்து சென்றார். அவரது சிஷ்யகோடிகள் செய்த ஓவர் ரீயாக்ஷன் எனக்கு எரிச்சலைத் தந்தாலும், கிட்டத்தட்ட 5 மணி நேரம் புத்தக அரங்குகளை அவர் பார்வையிட்டது கொஞ்சம் ஆச்சரியத்தை எனக்கு அளித்தது என்றே சொல்லவேண்டும். மொத்தத்தில் இன்று சுவாமி நித்யானந்த தினம்.

இஸ்லாமிய புக் டிரஸ்ட் சார்பாக புத்தகங்கள் வெளியீட்டு விழா அரங்க பொது மேடையில் நடந்தது.

தமிழினியின் புதிய மாத இதழ் 'தமிழினி' இன்றுதான் கைக்குக் கிடைத்தது. வழக்கம்போல தமிழினியின் புத்தகங்கள் பாணியில் சிலை ஒன்று புத்தகத்தின் அட்டையை அலங்கரித்தது.

எழுத்தாளர் ஷாஜி, சாரு நிவேதிதா, தேவதேவன், எஸ்ரா,ஜே.டி.க்ரூஸ் போன்றவர்களையும் ரோஸா வசந்த் போன்ற பதிவுலக நண்பர்களையும் காணமுடிந்தது.


பதிவு: ஹரன்பிரசன்னா


சுவாமி நித்யானந்தாவைக் காணக் கூடிய கூட்டத்தில் ஒரு பகுதி



சுவாமி நித்யானந்தாவைக் காணக் கூடிய கூட்டத்தில் ஒரு பகுதி




கூட்டத்துக்குள்ளே சுவாமி நித்யானந்தா



சுவாமி நித்யானந்தா



எழுத்தாளர் ஷாஜி




பொது மேடையில் இஸ்லாமிய புக் டிரஸ்டின் புத்தகங்கள் வெளியீடு



ஆழி சூழ் உலகு எழுத்தாளர் ஜே.டி.க்ரூஸ்


மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெற்று பயன்படுத்துமாறு வேண்டுகிறோம்.