இந்தியா டுடே, துக்ளக், தினகரன் வெள்ளி விழா மலர், பெண்ணே நீ, மங்கையர் மலர் உள்ளிட்ட இதழ்களில் வாஸந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
1996இல் வாஸந்தி எழுதிய கட்டுரையின் சாரமும் அடிநாதமும் இன்றைய சூழலுக்குப் பொருந்திப் போவதும் இன்றைக்கும் அதே கட்டுரைகளின் தேவை இருப்பதும் இந்நூலின் தேவையை உறுதி செய்கின்றன. எந்தவித பரிவும் கொள்ளாமல் கறாரான மொழியில் நேராகப் பேசிச் செல்லும் வாஸந்தியின் மொழி பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கை இழந்து கிடக்கும் அரசியலின் மீது புதிய நம்பிக்கை கொள்ளவும் வழி அமைத்துத் தருகிறது. பத்திரிகையாளர்கள் முயன்றால் ஒரு புதிய உலகத்தை திறந்து வைக்கும் திறவுகோல்களாக இருக்கமுடியும் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றன வாஸந்தியின் கட்டுரைகள். பெண்ணியவாதியாகவும் செயல்படும் வாஸந்தி பெண்ணுலகத்தின் தேவையை, அவ்வுலகத்தின் கட்டுக்கடங்கா சக்தியை "பெண்ணியக் கட்டுரை"களில் தீவிரமாக வெளிப்படுத்துகிறார். "பத்திரிகை தர்மம்" என்கிற கட்டுரைகளில் அவர் தன்னையும் தான் இயங்கும் பத்திரிகை உலகத்தின் செயல்பாடுகளையும் பரிசோதனைக்குட்படுத்திக்கொள்ளத் தயங்குவதில்லை. இந்த சுயசோதனை வாஸந்தியை ஒரு பத்திரிகையாளர் என்கிற முத்திரையிலிருந்து உயர்த்தி ஒரு இலக்கியவாதியாகக் காட்டுகிறது. வாஸந்தியின் எல்லாக் கட்டுரைகளிலும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பது மனித நேயம் என்கிற, இன்றைய அரசியலும் உலகமும் மறந்துவிட்ட ஒரு பொருளே. அதை தொடர்ந்து எழுதி, சக மனிதர்கள் மீது கொண்டிருக்கும் அன்பையும் பரிவையும் உறுதிபடுத்துகிறார் வாஸந்தி.
கோ.ராஜாராம் தன் பதிப்புரையில், "செய்திகளை மையமாய்க் கொண்ட ஒரு முக்கியமான தமிழ் ஏட்டின் ஆசிரியப் பொறுப்பில் இருந்து, பிற்காலத்தில் நடப்புகளை அலசும் கட்டுரையாளராய்ப் பரிணமித்திருக்கிற வாஸந்தியின் முக்கியமான தொகுப்பு இது. இதன் பக்கங்களில் இன்றைய அரசியல் சமூகச்சூழ்நிலை பற்றிய பெரும் அவநம்பிக்கையும், கவலையும் இருப்பதாய் முதல் பார்வையில் தோன்றினாலும், நம்பிக்கையே இதன் ஆணிவேர். காரணம் - வாஸந்தியின் பாரபட்சமில்லாத தன்மை. இன்று இந்தியாவில் சுதந்திரமான குரல் என்று ஒன்று இல்லை என்றே சொல்லிவிடலாம். சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல அமைந்திருக்க வேண்டிய பத்திரிகை உலகம், தம்முடைய சார்புகளுக்கு ஏற்ப செய்திகளைத் திரித்து வெளியிடுவதையும், வேண்டிய நபர்களை சரியான கோணத்தில் காட்டுவதும், வேண்டாத நபர்களை தவறாகக் காட்டுவதும் வழக்கமாகவே கொண்டுவிட்டது. ஆனால் வாஸந்தி தன் சார்பின்மையை அறச்சீற்றத்துடன் வெளிப்படுத்துகிறார். தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களைப் பார்வையிடும் சாதாரண மனிதனின் அச்சத்தையும், அவநம்பிக்கையையும் அவர் எதிரொலிக்கிறார்" என்கிறார்.
வாஸந்தி கட்டுரைகள் - பக்கங்கள்: 240 - விலை: 120
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment