Thursday, December 6, 2007

பாவண்ணன் எழுதிய நதியின் கரையில்

புதிய பார்வை இதழில் பாவண்ணன் எழுதிய 17 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.


எளிய மொழி, மனிதர்களின் மீதான அன்பு, உயிர்களின் மீதான பரிவு, கவிதை மனம் என எளிமையான, ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் அடையத் துடிக்கும் அழகான மனநிலைகளை படம் பிடிக்கின்றன பாவண்ணனின் எழுத்துகள். எளிமை என்றுமே இயல்பானது, அதனால் என்றுமே அழகானது என்கிற அடிப்படையில் சுழலும் பாவண்ணனின் உலகம், மனம் விம்மும் பெரும் சோகத்தைக் கூட இதே சூத்திரத்தில் முன்வைக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு கைக்கூடும் இந்தப் புள்ளி அவன் எழுத்தின் உச்சம் எனலாம். பாவண்ணன் மிக எளிதாக இந்த உச்சத்தில் சென்று அமர்கிறார். தான் கண்ட காட்சியை விவரித்துக்கொண்டே வரும் பாவண்ணன், ஒரு கட்டத்தில் அதை தான் ரசித்த கவிதைக்கு விளக்கமாகவும் அல்லது விமர்சனமாகவும் மாற்றும் கட்டத்தில், அந்த நிமிடம், அக்கட்டுரை காட்சியை விவரிக்கிற எழுத்து என்கிற தளத்திலிருந்து நகர்ந்து தீவிர இலக்கியத் திறப்புக் கொள்கிறது. இதை இயல்பாகச் செய்துவிடுவதுதான் இக்கட்டுரைகளின் கூடுதல் பலம். அழகியல் மனநிலைகளை படம்பிடிக்கும் இக்கட்டுரைகள் வாழ்வியல் அனுபவமாகவும் விரிகின்றன.




கோ.ராஜாராம் தன் பதிப்புரையில், "பாவண்ணன் 'திண்ணை' வலையேட்டில் சிறுகதை ரசனைத் தொடர் ஒன்றை எழுதி வந்தார். சிறுகதைகளை உருவம் , உள்ளடக்கம், நடை, மொழி என்றெல்லாம் பார்க்கிற பார்வையைத் தாண்டி, வாழ்வியல் அனுபவப் பதிவுடன் கதை அனுபவத்தை ஒப்பிட்டு அவர் எழுதிய தொடர் முன்மாதிரியில்லாத இலக்கிய வெளிப்பாடு. அதனைப் படித்த போது அவருடைய அனுபவவிரிவு எனக்கு ஆச்சரியம் ஊட்டியது. எப்படி இப்படிப் பரந்த தளத்தில் அவர் நுண்ணியதாய்த் தான் கண்டதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் என்று வியந்திருக்கிறேன், உள்வாங்கிய தன் அனுபவக் கூறை வாசக அனுபவமாய் மாற்றும் அளவிற்கு திறமையான, ஆனால் எளிமையான சொல்முறையும் அவருக்கு வாய்த்திருக்கிறது. இந்தத் தொகுப்பில் சுதந்திரப் போக்கில் அவர் கண்டதும் கேட்டதும் பதிவாகியுள்ளன. நாம் அனைவருமே கண்களையும், காதுகளையும், அவற்றைக் காட்டிலும் முக்கியமாக, மனத்தையும் திறந்து வைத்திருந்தால் பாவண்ணனின் அனுபவங்கள் நமக்கும் சாத்தியமானவையே" என்கிறார்.

நதியின் கரையில் (கட்டுரைகள்) - ஆசிரியர்: பாவண்ணன் - பக்கங்கள்: 144 - விலை: 70

No comments: