Thursday, December 6, 2007

உயிர்த்தலம் - ஆபிதீன்

உயிர்த்தலம் - ஆபிதீன் - சிறுகதைகள் தொகுப்பு

ஆபிதீன் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு.


அங்கதம் கலந்த நகைச்சுவையை தனது எழுத்தின் அடிநாதமாகக் கொண்டிருக்கும் ஆபிதீனின் கதைகள், தனது நகைச்சுவையின் வழியே பெரும் கேள்விக்கும் ஆய்விற்கும் தர்க்கத்திற்கும் உள்ளாகவேண்டிய பெரிய உலகத்தை திறந்து வைக்கின்றன. ஒவ்வொரு வரியிலும் இந்த சமூகத்தின் மீதும் சக மனிதர்கள் மீதும் தனது விமர்சன நிழலைப் பரப்பித் திரியும் இக்கதைகள், வெளி நாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் களத்திலும் செயல்பட்டு புதிய தேடலை சிருஷ்டித்துக்கொள்கின்றன. தான் இயங்கும், எதிர்கொள்ளும் சமூகத்தையும் சமூகத்தைச் சார்ந்த மனிதர்களையும் வெறுத்தோ அல்லது பதிலிறுக்கமுடியாத கேள்விக்குட்படுத்தியோ அவற்றிலிருந்து விலகாமல் அவற்றிற்குள்ளேயே உயர்ந்த பட்ச தேடலை, புதிய அலையை உருவாக்க முனைகின்றன ஆபிதீனின் எழுத்துகள். கதைகள் என்கிற இலக்கணத்தை உடைத்து கதைகளிலிருந்து கதைகளை நீக்கி, ஏற்கனவே கவனம் கொள்ளத் துவங்கியிருக்கும் புதிய மரபில் நான்கு கால் பாய்ச்சலில் செல்கின்றன இவரது கதைகள். 'கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை' என்பதன் மூலம் புனைவிற்கான வெளியை விரிவுபடுத்துவதிலும் பொதுமைப்படுத்துவதிலும் முக்கிய இடம் பெறுகின்றன 'உயிர்த்தலம்' தொகுப்பின் சிறுகதைகள்.



கோ.ராஜாராம் இதற்கு எழுதியுள்ள பதிப்புரையில், "ஆபிதீன் கதைகளைப் படிக்கையில் இரண்டு உணர்வுகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. ஒன்று : அவை சம்பிரதாயமான கதைகள் அல்ல. கதைகளின் இலக்கணத்தைப் பொருத்திப் பார்த்தால் அவை கதைகளே இல்லை என்று கூடச் சொல்லிவிடலாம். இன்னொன்று அபார நகைச்சுவை உணர்வு. சிறுகதைகளின் இலக்கணம், எடுப்பு, தொடுப்பு, சிக்கல், சிக்கலின் வளர்ச்சி, முடிவு என்று எந்தப் படிநிலையும் இல்லாமல், சரேர் என தொடங்கி, மனம் போன போக்கில், ஆனால் ஒரு திட்டத்துடன் நகர்ந்து மையப்புள்ளியை உருவாக்கிய நிமிடமே அதைச் சிதைத்து, மறு மையம் நோக்கிப் பாய்தல் என்று எல்லா இலக்கணங்களையும் மீறிய ஒர் அமைப்பு அவருடைய கதைகளில் காணக் கிடைக்கின்றது. அதனாலேயே தமிழின் கதைசொல்லலில் ஒரு புது அழகியலை அவை உருவாக்குகின்றன. சுவாரஸ்யம் இலக்கியச் சிறப்பிற்கு ஒவ்வாது என்ற அழுகுணி இலக்கணத்தையும் இவை மறுக்கின்றன. அவருடைய நகைச்சுவை அவருடைய தனித்த பார்வைக்குச் சான்று. நகைச்சுவை மூலம் சுற்றிலும் உள்ள அவலங்களையும், ஒவ்வாமைகளையும், முரண்பாடுகளையும் அவர் சித்தரிக்கிறார் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம். ஆனால் சிரிப்பு எழுந்த மறு வினாடியே மனதைப் பிசைகிற ஒரு துயரம் பெருக்கெடுக்கும் தருணங்கள் அவர் கதைகளில் உள்ளன. பிழைப்பிற்காக நாடு விட்டு நாடு வந்து, மனைவி மக்களைப் பிரிந்து உழலும் மனிதர்கள் சித்தரிக்கப் படுகிறார்கள். உன்னதமும் மலினமும் ஒன்றேபோல் பிணைந்து கிடக்கிற மனிதக் கூட்டம் ஏதோ கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளால் பிணைக்கப் பட்டு திணறும் உணர்வை இந்தக் கதைகள் ஏற்படுத்துகின்றன" என்கிறார்.


உயிர்த்தலம் (சிறுகதைகள்) - ஆசிரியர்: ஆபிதீன் - பக்கங்கள்: 256 - விலை: 130

No comments: