Friday, January 9, 2009

எனி இந்தியன் பதிப்பகத்தின் நான்கு புதிய புத்தகங்கள்

ஜெயமோகனின் ஈழ இலக்கியம்
ஒரு விமர்சனப் பார்வை





கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து:

“ஈழ இலக்கியம், கரிசல் இலக்கியம் என்று வாழ்புலம் சார்ந்த வரையறையின் மூலம் நம் பகுப்பு எதைக் குறித்தானது? வாழ்புலத்தின் புறஅடையாளங்கள் இலக்கியத்திற்கு யதார்த்தப் பின்னணியை அளிக்கலாம். வாழ்க்கை முறையையும், புலம் சார்ந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும் எழுதிச் செல்லலாம். ஆனால் அந்தப் புற அடையாளம் மட்டுமே இலக்கியச் சிறப்பை அளிப்பதில்லை. உடை, உணவு, பழக்க வழக்கங்களைச் சார்ந்திருப்பதைத் தாண்டி, வாழ்புலத்தின் அக அடையாளத்தைச் சுட்டும்வகையில் எழும் எழுத்துதான் இலக்கியம் ஆகிறது. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறையின் நடைச்சித்திரத்துக்கு அப்பால், நிரந்தர மதிப்பீடுகளை விசாரணை செய்ய வாழ்புலத்தின் புற அடையாளங்களைப் பயன்படுத்திக்கொண்டு, அதே நேரத்தில் அதைக் கடந்து செல்வதுதான் நல்ல இலக்கியத்தின் குணாம்சம். அதனால் ஈழ இலக்கியத்தைப் பற்றிய இந்தப் புத்தகத்தில் ஜெயமோகன் ஸ்ரீலங்கா தமிழர்களின் வாழ்க்கைப் பதிவுகளை எந்த இலக்கியவாதி கவனமாய்ப் பதிவு செய்திருக்கிறார் என்று பட்டியலிடவில்லை. அதற்குப் பதிலாக, காத்திரமான இலக்கியத்தைப் படைத்தளித்த இலக்கியவாதிகளை இனம் காட்டி ஏன் இவர்கள் பொருட்படுத்தி,பொக்கிஷமாய்ப் போற்றப்படவேண்டியவர்கள் என்று விரிவாகவும், ஆழமாகவும் பேசுகிறார். தேர்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்றே நிராகரிப்புக்கும் காரணம் காட்டத் தவறவில்லை.”

ஜெயமோகனின் முன்னுரையிலிருந்து:

”ஈழ இலக்கியம் குறித்து எனக்கு எப்போதுமே எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இருந்துள்ளது. இரண்டையும் தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறேன். எதிர்பார்ப்புக்கான காரணங்கள் பல. தமிழ்நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஈழம் பலமடங்கு கல்வி வசதியும், பொருளியல் வசதியும் கொண்டதாகவே முன்பு இருந்திருக்கிறது. சராசரித் தமிழர்களைவிட அறிவுக்கூர்மையும் தீவிரமும் கொண்டவர்களாகவே ஈழத்தமிழர் தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் ஈழ இலக்கியத்தின் தொடக்கம் தமிழ்நாட்டைவிட காலத்தால் முந்தையது. தமிழ்நாட்டைவிடவும் தீவிரமானது.

ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை எனக்கு ஈழ இலக்கியத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. அதைப் பதிவு செய்தமையால் நான் பழிக்கப்பட்டிருக்கிறேன். என்றாலும் அது என்னுடைய மனப்பதிவு மட்டுமல்ல, தொடர்ந்து வலுப்பெறும் விமரிசனக் கருத்தும்கூட. தொடர்ந்து சந்திக்க நேர்ந்த வரலாற்றுச் சவால்களைப் படைப்புத்தளத்தில் ஈழத்தவர் சந்திக்கவில்லை. அவ்வனுபவத்தின் தீவிரங்கள் இலக்கியத்தில் வெளிப்பட்டது மிகமிகக் குறைவேயாகும்.

அதற்கான காரணங்கள் பல. வரலாற்றுக் காரணங்கள், பண்பாட்டுக் காரணங்கள். ஆனால் இலக்கியப் படைப்புகளை வைத்துப் பார்க்கும்போது ஆழ்ந்த, அந்தரங்க அனுபவங்களுக்குள் செல்லாமல் புறவயமான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மட்டுமே நம்பி இலக்கியம் படைக்கும் ஒரு போக்கு அங்கு வலுவாக இருந்ததே முக்கிய காரணம் என்று எனக்குப் படுகிறது. படைப்பூக்கம் கொண்ட எழுத்துக்கள் அந்தக் கோட் பாட்டுப் பெருமுரசின் ஒலியில் மறைந்தும் போயின. இன்றும்கூட அங்கு அந்நிலையே நிலவுகிறது.”

மு. தளையசிங்கம், கா. சிவத்தம்பி, எஸ். பொன்னுத்துரை, அ. முத்துலிங்கம், வில்வரத்தினம், சேரன் ஆகியோரின் படைப்புகள் குறித்த ஜெயமோகனின் திறனாய்வு நூலில் இடம்பெற்றுள்ளது.



உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்)



உமா மகேஸ்வரி பற்றி:
1971ல் பிறந்த உமா மகேஸ்வரி 1985லிருந்து எழுதி வருகிறார். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றவர். நட்சத்திரங்களின் நடுவே (1990), வெறும் பொழுது (2002), கற்பாவை(2004) ஆகிய கவிதைத் தொகுதிகளும், மரப்பாச்சி (2002), தொலைகடல் (2004) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும், யாரும் யாருடனும் இல்லை (2003) என்ற நாவலும் வெளியாகியுள்ளன. கதா விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, இந்தியா டுடேயின் சிகரம் விருது, ஏலாதி, இலக்கிய சிந்தனை, கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசுகள் பெற்றவர். ஆண்டிப்பட்டியில் வசிக்கிறார்.

கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து:

”உமா மகேஸ்வரியின் கதைகளில் அழகியல் இயல்பாக வெளிப்படுவது இங்கே விசேஷமாய்க் குறிப்பிடத்தக்கது. அழகியலுக்கு எதிரான ஒரு பொதுக்கருத்தை தமிழ் இலக்கியச் சூழல் முன்வைத்து, இலக்கிய நுண் உணர்வினை அரசியலுக்குப் பலி கொடுத்துவிட்ட சூழலில் அர்த்தமுள்ள மறுப்பாக உமா மகேஸ்வரியின் அழகியல் மலர்ந்திருக்கிறது. வலிந்து ஏற்றப்படாத மலர்ச்சி அது. மணற்கன்னியும், ஏகாந்த மரமும் இந்த அழகியலின் எழிலையும் - கன்னி, ஏகாந்தம் என - சோகத்தையும் ஒருசேர மலர்விக்கின்றன. மற்ற கதைகளின் போக்கிற்கு உமா மகேஸ்வரியின் அழகியல் பார்வை இயல்பான வலிமையை அளிக்கிறது.

முன் உதாரணம் இல்லாத தனித்த பார்வையும், தனித்த பாணியும் கொண்ட இந்தக் கதைகளின் தொகுப்பை வெளியிடுவதில் எனி இந்தியன் பதிப்பகம் பெருமை கொள்கிறது.”

உமா மகேஸ்வரியின் என்னுரையிலிருந்து:

”இந்தக் கதைகளைப் படிக்கும்போது நான் எழுதாமல் விட்ட கதைகள் என்னைச் சூழ்ந்து சுழல்கின்றன. எப்போதும் ஏதாவது ஒரு கதையுடன் இருப்பது எவ்வளவு ஆசுவாசமானது!”

பதினான்கு சிறுகதைகள் புத்தகத்தில் உள்ளன.



பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள்



பி.ச. குப்புசாமி பற்றி:
வேலூர் (வடாற்காடு) மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்தவர் பி.ச. குப்புசாமி. 35 ஆண்டுகளுக்கும் மேலாக குக்கிராமங்களில் ஆரம்பப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழிலக்கியத்தில் - குறிப்பாக பக்தி இலக்கியத்தில் -ஆழ்ந்த ரசனையும் தேர்ச்சியும் கொண்டவர். மரபுக் கவிஞர். சந்திரமௌலி, குயிலி ஆகிய பெயர்களில் அறுபதுகளில் தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதினார். எழுத்தின் மீதுள்ள மதிப்பினாலேயே எழுதுவதைக் குறைத்துக்கொண்டவர். 48 ஆண்டுகளாக ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர். ஜெயகாந்தனை நன்கறிந்த நால்வரில் ஒருவராக அடையாளம் காணப்படுபவர். இவரது கங்கவரம் சிறுகதை விட்டல்ராவால் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த கதைகளுள் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. மனைவி சரஸ்வதி ஓய்வுபெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியை. ஒரு மகனும் மகளும் உண்டு.

கோபால் ராஜாராமின் பதிப்புரையிலிருந்து:
"இந்த இலட்சியவாதம் இந்த மனிதர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திவிடவில்லை. மாறாக சமூகத்தின் எளிமையான வாழ்நிலைக்குள்ளிருந்தே வெளிப்படுகிறது. மௌன உறவை வெளிப்படுத்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. பரஸ்பரம் தவறாக இல்லாத உணர்வுகளைக் கூட வெளிப்படுத்திக்கொள்ள முடியாதபடி தயக்கமும், சமூக உணர்வின் தாக்கமும், பரஸ்பர மரியாதையும் ‘கங்கவர'த்தின் நாயகன் சாரங்கனை, அவன் மிக மதிக்கிற, அனுதாபம் கொள்கிற பெண்ணுடன் ஒரு வாக்கியத்துக்கு மேல் பேச முடியாமல் செய்கிறது. காலங்காலமாய்க்காதல் கொள்ளும் பெண் தன் உணர்வுகளை வெளிப்படுத்த காதலனின் மரணப்படுக்கை வரையில் காத்திருக்கிறாள்.

‘உரமேறி மரத்துப் போகாதவனாய், வாழ்க்கையையும் அதன் ஒவ்வோர் அம்சத்தையும் மிகவும் அபூர்வமானதாய்க் கருதிக் கரைந்து போகிறவனாய்'இருந்த சாரங்கனைப் போலவே பல மனிதர்கள் இந்தக் கதைகளில் வலம் வருகிறார்கள்.

தெரிந்த முகங்கள்தான். ஆனால் நாம் கவனிக்கத் தவறிய முகங்கள் அவை.

மென்மையும் மேன்மையும் கொண்ட மனிதர்கள் இந்தக் கதைகளில் உலவுகிறார்கள். தனக்குப் பிடிக்காத ஒருவனைக் கணவனாய் ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுவேன் என்று உறுதியாய்ச் சொல்லும் சிறுமியிடமும் இந்த மென்மையும் மேன்மையும் வெளிப்படக் காணலாம்.”

ஜெயகாந்தனின் அணிந்துரையிலிருந்து:
புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கதையைப் பற்றியும் விரிவாகப் பேசுகிற ஜெயகாந்தன் பின்வருமாறு அணிந்துரையை நிறைவு செய்கிறார்.

”நண்பர் பி.ச. குப்புசாமியிடம் எனக்கு ரொம்ப பிடித்த குணம் இந்த Unassuming nature தான். இப்போது He assumes and proves that he is a perfect Talented writer! இந்தத் தொகுப்பின் மூலம் தான் ஒரு திறமையுள்ள முழுமையான எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறார்.

மகிழம்பூ காலம் கடந்த பிறகுதான் மணக்கும். நண்பர் பி.ச.கு. மகிழம்பூ ஜாதி!”

பி.ச. குப்புசாமியின் 9 சிறுகதைகள் நூலில் உள்ளன.



நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார்



நாகரத்தினம் கிருஷ்ணா பற்றி:
நாகரத்தினம் கிருஷ்ணா பிறந்தது புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் (தமிழ்நாடு) மாவட்டத்தைச் சேர்ந்த கொழுவாரி என்ற சிறு கிராமம். கல்வி, வருவாய்த்துறையில் பணி, திருமணமென இந்திய வாழ்க்கையின் பெரும்பகுதி புதுச்சேரிக்குச் சொந்தமானது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமான ஸ்ற்றாஸ்பூர் (Strasbourg) என்ற நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் (Sociology) முதுகலைப்பட்டம், பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. தொழில் வாணிபம், பகுதி நேரமொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதிவருபவர். முதல் நாவல் நீலக்கடல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்துள்ள எனி இந்தியன் பதிப்பகத்தின் மாத்தாஹரி நாவலும் விமர்சகர்களிடத்தில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், இரண்டு பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நாவல்கள், பிரெஞ்சு சிறுகதைகள் மொழிபெயர்ப்புத் தொகுப்பொன்று, பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் என்ற பெயரில் கட்டுரைத் தொகுப்பொன்று வெளிவந்துள்ளன.

கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து:
”பிரெஞ்சு மொழியை நன்றாக அறிந்த நாகரத்தினம் கிருஷ்ணா ஆழமாய் சிமொன் தெ பொவ்வாரைப் பயின்றது மட்டுமல்லாமல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, அவர் ஆய்வு மேற்கொண்ட துறைகளான வரலாறு, தத்துவம், நடைமுறை எல்லாவற்றையும் நுணுக்கமாக அணுகியுள்ளார். அவருடைய பெண்விடுதலைக் கருத்துகளை ஒப்புக்கொண்டு அவற்றின் அடியாழத்திற்குச் சென்றுள்ளார். மிகத் தெளிவான மொழியில், தமிழருக்கு மிக அருகாமையில் சிமொன் தெ பொவ்வாரைக் கொண்டுவந்துள்ளார்.ஓர் அறிவுஜீவியின் வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு இந்த நூல் ஓர் உதாரணமாய் இருக்கிறது என்றால் மிகையில்லை.”

நாகரத்தினம் கிருஷ்ணாவின் முன்னுரையிலிருந்து:
”பள்ளி வயதில் எதிர்காலத் திட்டம் குறித்து எழுதப்பட்ட வியாசங்களில் புகழ்பெற்ற எழுத்தாளராக வரவேண்டுமென்ற கனவினை வெளிப்படுத்தி பிற்காலத்தில் அதனை நனவாக்கியவர் எவருமுண்டா என்று கேட்கும்பட்சத்தில் சட்டென்று சுட்டக்கூடிய ஒரு பெயர் சிமொன் - புதிரான பெண்மணி. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிரெஞ்சு இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி, தத்துவவாதி, பெண்விடுதலையை வலியுறுத்தியவர். இரண்டாம் உலகப்போருக்குப்பின் பெண்ணுரிமைக்கான தத்துவார்த்த சிந்தனைகளை அறிவுஜீவிகளுக்கு மட்டுமின்றி வெகுசனப்பார்வைக்கும் கொண்டு சென்றிருக்கிறார். பிற்காலத்தில் அவரை முன்மாதிரியாகக்கொண்டு பெண்ணியல்வாதிகள் உலகமெங்கும் நம்பிக்கையுடனும், உயிர்ப்புடனும் இயங்கினார்கள். சிறந்த நாவலாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அதாவது பெண்விடுதலை சிந்தனைகள் புதிய தளத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்பாக சிமொன் தெ பொவ்வாருடைய ‘இரண்டாமினம்' என்ற நூலே, பெண்விடுதலையில் அக்கறைகொண்ட புதுமைப்பெண்களுக்கிடையே சங்கேதமாகப் பயன்பட்டு அவர்களை ஓரணியில் திரட்டியது என்பதையும் இங்கே எழுதியாகவேண்டும்.

அரசியலாகட்டும், இலக்கியமாகட்டும், பிரான்சு நாட்டைப் பொருத்தவரை சிமொனை மையப்படுத்தியே அவர் காலத்திய நிகழ்வுகள் முன்நகர்ந்தன.”

சிமொன் தெ பொவ்வார் - ஒரு திமிர்ந்த ஞானச்செருக்கு, சிமொன் தெ பொவ்வார் - லான் போல் சார்த்ரு, சிமொன் தெ பொவ்வார் - நெல்ஸன் அல்கிரென், இரண்டாமினம் - ஒரு பார்வை, இரண்டாமினம் முதல் பாகம் - விதி, பொருள்முதல்வாதமும் பெண்களும், பெண்களும் வரலாறும், பழங்கதைகளும் பெண்களும், இரண்டாமினம் - இரண்டாம் பாகம், சூழ்நிலையும் பெண்களும், இரண்டாமினம் நூலுக்கு சிமொன் தெ பொவ்வார் எழுதிய முன்னுரை, சிமொன் தெ பொவ்வார் - நேர்காணல், சிமொன் வாழ்க்கைக் குறிப்புகள், சிமொன் படைப்புகளின் பட்டியல் ஆகிய அத்தியாயங்கள் புத்தகத்தில் உள்ளன.