Thursday, July 31, 2008

திரு. பாலபாரதிக்கு...

தொடர்புடைய பாலபாரதியின் பதிவு இங்கே.


திரு. பாலபாரதிக்கு,

புதிய புத்தகங்களை எனிஇந்தியன்.காமில் மாதம் இருமுறை (முதல், பதினைந்து தேதிவாக்கில்) வலையேற்றுகிறோம். எங்கள் வலைத்தளத்தில் இல்லாத புத்தகங்களைக்கூட Custom Order வழியாக வாங்க முடியுமென்பதால் புதிய புத்தகங்களை மாதம் இருமுறை மட்டுமே வலையேற்றுவதால் நுகர்வோருக்குச் சிரமம் ஏதுமில்லை. ஆனாலும், நண்பர்கள் மற்றும் பதிவர்கள் புத்தகங்கள் எழுதி அதை எனிஇந்தியனில் விற்கச் சொல்லும்போது, கூடுமானவரை அவர்களுக்கு உதவியே வந்துள்ளோம். மேலும், வலைப்பதிவர்கள் எழுதிய புத்தகங்களை எனிஇந்தியன்.காமின் முதல் பக்கத்தில் வைத்து ஆதரவளித்திருக்கிறோம். (உதாரணம்: மயிலிறகால் ஒரு காதல், சித்திரம் கரையும் வெளி, மருதம், கஜல், கானா, மு.க.)

'அவன் - அது = அவள்' என்கிற உங்கள் புத்தகம் எங்கள் கைகளுக்கு ஜூலை பதினைந்தாம் தேதிக்குப் பின்னரே பதிப்பாளர் மூலம் வந்தது. அதனால் அடுத்தமுறை புத்தகங்களை வலையேற்றும்போது (ஆகஸ்ட் 1 வாக்கில்) வலையேற்ற முடிவுசெய்யலாம் என்றிருந்தோம். நீங்கள் என்னைத் தொலைபேசியில் 25ம் தேதி (காலை 11:30 மணிக்கு) அழைத்து அப்புத்தகத்தை எனிஇந்தியன்.காமில் ஏற்றச் சொன்னீர்கள். அப்போதே நான் உங்களிடம் 'வார்த்தை' இதழ் தயாரிப்பில் இருக்கும் வேலைப்பளுவையும் பரபரப்பையும் சொல்லி, ஆனாலும் இரண்டு நாள்களில் ஏற்றுவதாகச் சொன்னேன். பதினைந்து நாள்களுக்கொருமுறை மட்டுமே நாங்கள் வலையேற்றுவதென்றாலும், நீங்கள் அழைத்தபோது இரண்டு நாள்களில் ஏற்றுவதாகச் சொன்னேன். அப்போது நீங்கள் இன்னும் அவசரம் என்று சொன்னபோது, இயன்ற அளவு எவ்வளவு சீக்கிரம் ஏற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வலையேற்றுகிறேன் என்றே சொன்னேன். அதன் பின்னர், உங்கள் புத்தகத்தின் தலைப்பு 'அவன் - அது = அவள்' என்பது insensitive ஆக இருப்பதோடு மட்டுமில்லாமல் திருநங்கைகளையும் பெண்களையும் அவமதிப்பதாகவும் இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. உங்கள் புத்தகம் திருநங்கைகளுக்கு ஆதரவானது என்றாலும் ஆண் பாலியல் குறி இல்லையென்றால் பெண் என்ற பொருள் வரும் அவன் - அது = அவள் என்ற தலைப்பு தங்கள் உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்று பெண்களும் திருநங்கைகளும் சொல்லக் கூடுமோ என்று எனிஇந்தியன் நிர்வாகம் யோசித்தது. அதனாலேயே உங்கள் புத்தகத்தை வலையேற்றுவது குறித்து முடிவு செய்ய இரண்டு நாட்களுக்கு மேலானது.

புத்தகங்களை வலையேற்றுவது குறித்து வரையறுக்கப்பட்டிருக்கிற திட்டப்படி எனிஇந்தியன்.காம் செயற்படுகிறது. ஆனாலும் பல நேரங்களில் பதிப்பாளர்களுக்கும் நண்பர்களுக்கும் இவ்விஷயத்தில் உதவும்பொருட்டுச் சிலநேரங்களில் புத்தகங்களை மாதத்தில் பலமுறைகூட வலையேற்றுகிறோம். இப்படிப் பலமுறை வலையேற்றுவது எங்களுக்கு இருக்கும் நேரத்தைப் பொருத்தது. ஆனால், இதுகுறித்து யாரும் எனிஇந்தியன்.காமுக்கு நெருக்குதல் தருவது சரியில்லை. புத்தகங்களை உடனடியாக வலையேற்ற வேண்டும் என்ற தங்கள் அவஸ்தையில் நாங்கள் பதினைந்து நாட்களுக்கு மேலாக புத்தகங்களை வலையேற்றாமல் அவதிப்பட்டதாகத் தாங்கள் சொல்வது உண்மையில்லை.

நாங்கள் முடிவெடுப்பதற்குள் தாங்கள் முடிவுசெய்து புத்தகம் வேறு தளங்களில் கிடைக்கும் என்று அறிவித்த செய்தியை வாசித்தோம். தங்கள் புத்தகம் அத்தளங்களின் வழியே சிறப்பாக விற்பனையாகவும் வெற்றியடையவும் எனிஇந்தியன்.காமின் வாழ்த்துகள்.

ஹரன் பிரசன்னா
இயக்குநர்
எனிஇந்தியன்.காம்